“உலகளாவிய ரீதியில் சமூக அடுக்கமைவுகள் பல காணப்பட்டாலும் அவற்றின் வகைகளும் தாக்கங்களும் வேறுப்பட்டவை -யாக அமைவதோடு மக்களின் வாழ்வாதார முறைகளை உருவாக்கவும் கட்டியெழுப்பவும் உறுதுணையாக அமைகின்றன. சமூக அடுக்கமைவானது அனைத்து சமூகங்களுக்கும் பொதுவான செயன்முறையாகும்.”
மனிதன் ஒரு சமூகப் பிராணியாவான். மனிதனால் தனது தேவை, விருப்பங்களை தனித்து நிவர்த்திக்க இயலாது எனவே தமது தேவை, விருப்பங்களை நிறைவு செய்துக் கொள்ளும் பொருட்டு சமூகத்தோடு சேர்ந்து வாழப் பழகிக்கொண்டான். சமூகமானது இனம், மதம், மொழி, ஆண், பெண், பாலியல் இயல்பு, சமூகவகுப்பு என்பவற்றுக்கு ஏற்ப பல்வகைப்பட்டு அமைந்துள்ளது.
பல்வேறு மக்களிடையே நிலவும் கட்டமைப்புசார் ஏற்றத்தாழ்வை சமூக அடுக்காக்கம் எனக் கூறலாம். பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை தரத்தைப் பொறுத்தும், அரசியல் அதிகார செல்வாக்கைப் பொறுத்தும், சமய சமூக அந்தஸ்த்தை பொறுத்தும் தனிநபரையோ அல்லது சமூக குழுக்களையோ தாழ்வு நிலையிலிருந்து உயர்நிலை வரை படி நிலை அடுக்கமைவாகப் பிரிக்கப்படும் போது ஏற்படும் பிரிவுகள் வகுப்பு அல்லது வர்க்கம் என சமூகவியலாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். சமூகமானது இயல்பாகவே பல குழுக்களைக் கொண்டமைந்ததாகவே காணப்படுகிறது. இவ்வாறு ஒரு சமூகத்தினை பல்வேறு குழுக்களாக வகைப்படுத்தப்படுவதை சமூக அடுக்காக்கம் என சமூகவியலறிஞர்கள் குறிப்பிடுகின்றர்.
சமூக அடுக்காக்கத்திற்கு அமைவாக சமூகத்திலுள்ள குழுக்களின் ஒழுங்கமைவும் அடுக்காக்;களுக்கான சமூக மதிப்பும் வேறுபட்டு அமைவதைக் காணலாம். இவ்வாறு சமூகப் படிநிலையில் காணப்படும் பல்வேறு வகைப்பட்ட குழுக்கள் வேறுபாடான அந்தஸ்த்தைக் கொண்;டனவாக காணப்படும். இவ்வாறே சமூகத்தின் வெவ்வேறுபட்ட அடுக்கமைவிலுள்ள குழுக்களுக்கு வாய்ப்புகளும், வசதிகளும் ஒரே மாதிரியாகக் கிடைப்பதில்லை. சமூக அடுக்காக்கத்தின் உயர்நிலையில் உள்ள மேலடுக்கக் குழு பல்வேறு வகைப்பட்ட நன்மைகளையும் சாதகமானத் தன்மைகளையும் அனுபவிப்பதாகக் காணலாம்.
இத்தகைய சமூக அமைப்பில் சமத்துவமின்மையானது நிரந்தரமாக நிலைபெற்றிருப்பதுடன் இது தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டும் வருகின்றது. இத்தகைய சமூக அடுக்காக்கங்களை சமூகவியலறிஞர்கள் பல்வேறு வகையில் வரைவிலக்கணப்படுத்தி உள்ளனர். இதன் போது பொருளாதாரம், கல்வி சமூக அங்கீகாரம் என்பன கருத்திற் கொள்ளப்பட்டு வந்துள்ளமையை நோக்கக் கூடியதாக உள்ளது. சமூக அடுக்கமைவினை பல்வேறு அடிப்படைகளில் வகைப்படுத்தினாலும் சமூகவியலாளர்களினால் பொருளாதார அடிப்படையில் உயர் வகுப்பு, நடுத்தர வகுப்பு, உழைக்கும் வகுப்பு என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்காலச் சமூகத்தில் உயர் வகுப்பு (Upper Class) என்பது மிகக் கூடிய அரசியல் அதிகாரத்தைக் கொண்டவர்களும், பெரும் பணக்காரர்களாகவும் உள்ள உறுப்பினர்களை கொண்ட சமூக வகுப்பாகும்;. உயர் வகுப்பினரை நோக்கும் போது பொதுவாகத் தலைமுறை தலைமுறையாக கொண்டு செல்லப்படும் செல்வத்தினால் அடையாளப்படுத்தப்படுகின்றது. 20ம் நூற்றாண்டுக்கு முன்னரான பகுதியில் இவ்வகுப்பினரை குறிக்க உயர் குடியினர் எனும் சொல் பயன்படுத்தப்பட்டது.
நடுத்தர வகுப்பினர் ( Middle class) என்பது சமூகப் படிநிலை அமைப்பில் நடுவிலுள்ள வகுப்பினரை குறிக்கும். மெக்ஸ் வெபர் (Max Weber 1864-1920) எனும் சமூகவியலாளரின் வெபரிய சமூக-பொருளாதார சொற்பயன்பாட்டின் படி தற்காலச் சமூகத்தின் சமூக-பொருளாதார அடிப்படையில் தொழிலாளர் வகுப்புக்கும், உயர் வகுப்புக்கும் இடையிலிருக்கும் பரந்தளவு மக்கள் கூட்டத்தை குறிக்கிறது. பொதுவாக இம்மக்கட் பிரிவில் தொழில்துறை வல்லுனர்கள், புலமையாளர்கள், அரச சேவையாளர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர் அடங்குகின்றனர்.
உழைக்கும் வகுப்பு என்பது சிறப்பாக உடல் உழைப்பு வேலைகளிலும், கைத்தொழில் துறையிலும் கூலி வேலை செய்யும் மக்கட் குழுவைக் குறிக்கும்.
அடுத்ததாக உலக நாடுகளில் சமூக அடுக்கமைவுகளை எடுத்து நோக்கும் போது முதலாவதாக இந்திய உபகண்டத்தின் கலாசாரத்துடன் இணைந்து காணப்படும் சாதி முறையை சமூக அடுக்கமைப்புக்கு இன்னொரு சிறந்த உதாரணமாகும். மரபுவழி இந்தியாவிலுள்ள இந்து சமூகங்கள் நான்கு வருணங்களையும், தீண்டத்தகாதோர் என்றழைக்கப்படும் ஐந்தாவது பிரிவினையும் கொண்ட அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அடுக்கும் பல்வேறு தொழில்களின் அடிப்படையில் பல ஜாதிகளைக் கொண்டுள்ளன. சடங்குகளுடன் கூடிய தூய்மை நிலை ஜாதிகளைக் வரிசைநிலைப்படுத்தவும். ஒவ்வொரு ஜாதிக்குமான அதிகாரங்களை எடுத்துக் காட்டவும் உரிய வழிமுறையாக உள்ளதுடன் அடுக்கமைப்பில் குழுக்களின் படிமுறை அமைவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அடுக்கிலுள்ள மக்கள், குறிப்பிட்ட அடையாளத்தை கொண்டிருப்பர். சமூகத்தின் வெகுமதிகளை பகிர்ந்து கொள்வதிலும் சமமற்றத் தன்மை நிலவும். ஆயினும் இத்தகைய சமமின்மை நிலவுவதற்கு சாதி முறைமையிலான அடுக்கமைவு மட்டும் காரணமன்று. கைத்தொழில் சமூகங்களில் அடுக்கமைவு சமூக வகுப்பின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளது.
அடுத்ததாக தென்னாபிரிக்க நாடுகளில் நிறபேதம் என்னும் எண்ணக்கருவின் செல்வாக்கு அச்சமூகத்தில் தற்போதும் காணப்படுகின்றது. அங்கு அண்மைகாலம் வரையில் வெள்ளையருக்கும் கறுப்பினத்தவருக்கும் இடையில் கடுமையான பிரிவினைவாதம் காணப்படுகின்றது.
இவர்களிடையே திருமண உறவுகள் கூட சட்டரீதியாகத் தடுத்துவைக்கப்பட்டன. கறுப்பினத்தவர்கள் இன்றும் தமது உரிமைகளுக்காகப் போராடுவதினை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
சொத்துரிமை ரீதியான அடுக்கமைவானது வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு முறைகளில் நிலவிவந்துள்ளது. இதன் முதலாவது வகையாக ஐரோப்பிய நில மானிய முறையின் கூறாக விளங்கும் சொத்துரிமை, ரோமனியர் காலந்தொடக்கம் கடந்த நூற்றாண்டு வரையில் (சில நாடுகளில்) காணப்பட்டது. இதன் இரண்டாவது வகையாக மத்திய காலப்பகுதியில் செயற்பட்டு வந்த திருச்சபைகளின் வரிசை நிலைகளை குறிப்பிடலாம். திருச்சபைகள் மேல் மற்றும் கீழ் வரிசைகளை வலியுறுத்தியதோடு அதனை இறுக்கமாகவும் கடைப்பிடித்தன. மதகுருமார் மத்தியில் கூட அதிகாரம் கூடியவர்கள், அதிகாரம் குறைந்த கிராமிய குருமார்கள் என்ற ஒழுங்குக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்கள். சொத்துரிமையின் அடிப்படையில் நிலவிய அடுக்கமைப்பில் உயர் அடுக்கில் இருந்தவர்களுக்கு தனிப்பட்ட கல்வி முறை இருந்ததோடு அவை விசேட ஆற்றல்களை விருத்தி செய்யவும் உதவின. சாதாரண மக்களுக்குரிய வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
இறுதியாக இலங்கையிலே சமூக அடுக்கமைப்பினைத் தீர்மானிக்கும் காரணிகள் என்ற வகையில் இனம், மொழி, வயது, பால்நிலை, சமூக வகுப்பு போன்ற காரணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையென சமூகவியலாளர் (வுரனழச ளுடைஎய – 1995) எடுத்துக்காட்டியுள்ளார். இலங்கையில் சிங்களவர் மத்தியிலும் தமிழர் மத்தியிலும் சாதி முறைமையின் செல்வாக்கு தொடர்ந்தும் இடம்பெறுகிறது. இலங்கையின் சமூக அடுக்கமைப்பில் இன்னொரு முக்கியமான விடயம் சமூக வகுப்பாகும்.
சொத்துரிமை அடிப்படையிலும், வாழ்க்கை முறையின் அடிப்படையிலும் இலங்கையில் சமூக வகுப்புகள் இனங்காணப்பட்டுள்ளன.
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் பொருளாதார அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் மேலோர் குழாத்தின் தோற்றத்திற்கு காரணமாக இருந்ததென மைக்கல் றொபற்ஸ் (ஆiஉhநட சுழடிநசவள – 1973) என்பவர் குறிப்பிட்டுள்ளார். அக்காலத்தில் மரபுவழி விவசாயத்துடன் இணைந்து தொழிலமைப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள், பெருந்தோட்டத்துறை விரிவாக்கம் பெற்றபோது சேவைத்துறையில் உண்டான வளர்ச்சி,
பெருந்தோட்ட தொழிலாளர் வருகை என்பன இலங்கையில் உயர் வகுப்பினர், மத்திய வகுப்பினர் எனும் அடுக்கமைப்புகள் தோற்றம் பெறக் காரணமாகின. மேலும் அக்காலக் கல்விமுறையில் ஆங்கிலக் கல்வியை கற்றோர் அரசத்துறையில் உயர் பதவிகளைப் பெற்று சமூக நிலையில் உயர்வடைந்தப் போது மத்திய வகுப்புத் தோற்றம் பெற்றது. சுதந்திரத்தின் பின்னர் கல்வி வாய்ப்புகள் விரிவாக்கம் பெற்றமையும் இதற்கு காரணமாகும். 1977 இற்கு பின்னர் திறந்தப் பொருளாதாரக் கொள்கைகளும், தொழில் அமைப்பில் ஏற்ப்பட்டு வரும் மாற்றங்களும், தனியாள் ஆற்றல்களும், திறமைகளும் முக்கியத்துவம் கொடுக்கும் போது சமூக அடுக்கமைப்பில் மாற்றங்கள் உண்டாகின.
வெவ்வேறு நாடுகளில் சமூக அடுக்கமைவானது அரசியல் பொருளாதார சமூக கலாசார தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு அமையப் பெற்றுள்ளதை கண்கூடாக காணலாம். உயர் வர்க்கத்தினருக்குக் கிடைக்கப் பெறும் அதிகாரம், உரிமைகள், சலுகைகள் என்பன ஏனைய வர்க்கத்தினருக்கும் பகிர்ந்தளிக்கப்படுமாயின் சமூக அடுக்கமைவினால் ஏற்படும் தாக்கங்கள் சாதகமானதாக அமையப்பெறும். உலக நாடுகளுக்குக்கிடையில் சமூக அடுக்கமைவு எனும் பெயரின் அடிப்படையில் பிளவுப்பட்டு இருக்கும் சமூதாயக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்துவதில் தாக்கம் செலுத்தும் காரணிகளாக பொருளாதாரம் மற்றும் கல்வி முறைமை என்பவற்றை சுட்டிக்காட்ட முடியும். குறிப்பாக கல்வி தாழ் சமூகத்திலும் சீராக கொடுக்கப்பட்டால் எதிர்கால சந்ததியினரிடையே சமூக அடுக்கமைவு என்ற எண்ணக்கருவானது காணாமல் ஆக்கப்படும் என்பது எனது ஆழ்ந்தக் கருத்தாகும். ஒரு சமூகம் கல்வியில் முன்னேற்றமடைந்தால் பொருளாதார வளர்ச்சி என்பது தானாக நிகழ்வதுடன் சமூக அடுக்கமைவும் இல்லாது ஒழிக்கப்படும்.